வீட்டு சுவர் இடிந்து பாட்டி-பேரன் பலி
வீட்டு சுவர் இடிந்து பாட்டி-பேரன் உயிரிழந்தனர்.
ஜெயங்கொண்டம்:
மின்னல் தாக்கியது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேவாங்க முதலியார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் விஜயகுமாருக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் பாரதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 3-வது மகன் அஜீத்குமார்(வயது 25). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். ஆறுமுகம் அப்பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் தனது தாய் லட்சுமி (80), மனைவி செல்வி, மகன் அஜீத்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் ஆறுமுகம் வீட்டின் அருகில் உள்ள வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் மின்னல் தாக்கியது.
சுவர் இடிந்து பலி
இதில் தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து அருகில் உள்ள ஆறுமுகம் வீட்டின் மீது விழுந்தது. இதனால் ஏற்கனவே மழையால் ஊறியிருந்த அந்த வீட்டின் ஓடுகள் மற்றும் மண்சுவர் இடிந்து உள்ளே விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி, அஜீத்குமார் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறுமுகம், செல்வி ஆகியோர் மற்றொரு அறையில் படுத்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் இருந்து லட்சுமி, அஜீத்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
போலீசார் விசாரணை
மேலும் அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் லட்சுமி, அஜீத்குமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜீத்குமாருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் வீடு இடிந்து அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் தொட்டி விழுந்து சுவர் இடிந்ததில் பாட்டி, பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story