மாவட்டத்தில் 11 தொகுதிகளில்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


மாவட்டத்தில் 11 தொகுதிகளில்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 2 Nov 2021 2:07 AM IST (Updated: 2 Nov 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 11 தொகுதிகளில்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம், நவ.2-
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 11 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கார்மேகம் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது, தி.மு.க., அ.தி.மு.க,பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.
திருத்தம் செய்யும் பணி
இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1.1.2022-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி இன்று (நேற்று) முதல் தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் 15 லட்சத்து 529 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 16 ஆயிரத்து 874 பெண் வாக்காளர்களும், 200 இதர வாக்காளர்களும் என மொத்தம் 30 லட்சத்து 17 ஆயிரத்து 603 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வழக்கம் போல் பெண் வாக்காளர்களே அதிகளவில்உள்ளனர்.
விண்ணப்பிக்கலாம்
இந்த வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கான படிவங்கள் 1-ந் தேதி (நேற்று) முதல் தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் விண்ணப்பிக்கலாம். தாலுகா அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in என்ற முகவரியிலும், Voter Helpline என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் வருகிற 13, 14, 27, 28 ஆகிய 4 நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 1,216 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும்.
இறுதி வாக்காளர் பட்டியல்
1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் (அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவம் 8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும்.
வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்படும். வருகிற 30-ந் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு கலெக்டர்கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story