பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்


பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 2 Nov 2021 2:57 AM IST (Updated: 2 Nov 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.

அருப்புக்கோட்டை,
1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். 
பள்ளிகள் திறப்பு 
கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புகளை திறக்க அரசு உத்தரவிட்டது. இதையொட்டி நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 
விருதுநகர் மாவட்டத்தில் 1,114 தொடக்கப்பள்ளிகளும், 234 நடுநிலைப்பள்ளிகளும் ஆக மொத்தம் 1,348 பள்ளிகள் திறக்கப்பட்டன. விருதுநகரில் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நேரில் சென்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் மாணவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அமைச்சர் ஆய்வு 
 கலெக்டர் மேகநாதரெட்டி தாதம்பட்டி மற்றும் சூலக்கரையில் யூனியன் தொடக்கப்பள்ளிகளுக்கு சென்று பள்ளி குழந்தைகளை ரோஜா மலர் கொடுத்து வரவேற்றார். மேலும் குழந்தைகளுக்கு பென்சில் மற்றும் பேனா வழங்கி உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் கலெக்டர் மேகநாத ரெட்டி அப்பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞான கவுரி, தாசில்தார் செந்தில்வேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை மேள தாளத்துடன் வரவேற்றனர். 
நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் பள்ளி மாணவர்களை வரவேற்று இனிப்பு வழங்கினார். 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பண்ணை தோப்பூரில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மேளதாளத்துடன் மாணவர்களை வரவேற்றனர். 
இதில் வட்டாரக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஆனந்த ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகவூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர். 
எம்.எல்.ஏ. வரவேற்றார் 
மாணவர்களை வரவேற்கும் விதமாக சிவகாசியை அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அசோகன் எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் இந்திராணி, காங்கிரஸ் பிரமுகர்கள் வைரகுமார், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story