கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 3-வது இடம்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 3-வது இடம்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2021 5:43 AM IST (Updated: 2 Nov 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். 
பள்ளிகள் திறப்பு
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்பு அளித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மாணவ-மாணவிகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளதால், படிப்படியாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,306 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 157 மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், மாணவ-மாணவிகளும் ஆர்வமாக வகுப்புக்கு செல்வதை காணமுடிகிறது. அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்றப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 73 சதவீதம் பேர் போட்டு உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் செலுத்தி உள்ளனர். தடுப்பூசி போடுவதில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து உள்ளது. தொடக்க காலத்தில் தடுப்பூசி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதிகமான நபர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், வாக்குச்சாவடி வாரியாகவும், பிறகு வாக்காளர் பட்டியல் அடிப்படையிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
தற்போது இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
இந்த பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உடனிருந்தார்.

Next Story