கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இன்று பசவராஜ் பொம்மை பாகினா பூஜை செய்கிறார்
முழு கொள்ளளவை எட்டியதால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இன்று பசவராஜ் பொம்மை பாகினா பூஜை செய்கிறார்.
மண்டியா: முழு கொள்ளளவை எட்டியதால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இன்று பசவராஜ் பொம்மை பாகினா பூஜை செய்கிறார்.
கே.ஆர்.எஸ். அணை
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை அமைந்துள்ளது. இந்த அணை தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் நிரம்பி உள்ளது. இதனால், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் பாகினா பூஜை செய்ய நீர் பாசனத்துறை, காவிரி வளர்ச்சி வாரியம் ஆகியவை முடிவு செய்தது.
பாகினா பூஜை
ஒவ்வொரு ஆண்டும் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பும்போது முதல்-மந்திரி நேரில் வந்து பாகினா பூஜை செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் வந்து பாகினா பூஜை செய்ய இருந்தார். இதற்காக கடந்த மாதம்(அக்டோபர்) தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென இறந்துவிட்டதால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதாவது நவம்பர் 2-ந் தேதி பாகினா பூஜை செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பாகினா பூஜை செலுத்துகிறார். இதற்காக அவர் இன்று பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு கபினி அணைக்கு பாகினா பூஜை செலுத்துகிறார்.
அதையடுத்து அவர் கார் மூலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு வந்து அங்கு பாகினா பூஜை செலுத்துகிறார். அவருடன் நீர்பாசனத்துறை மந்திரி கோவிந்த கார்ஜோள், மந்திரி நாராயணகவுடா, மந்திரி எஸ்.டி. சோமசேகர், எம்.எல்.ஏ.க்கள், ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மைசூரு மற்றும் மண்டியா மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story