‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 2 Nov 2021 9:25 AM IST (Updated: 2 Nov 2021 9:25 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தெருவில் குப்பைகள் தேக்கம்

சென்னை ராயபுரம் ரங்க பிள்ளை தோட்ட தெருவில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. இதனால் இந்த தெருவில் குப்பைகள் அதிகளவில் தேங்கி உள்ளது. தூய்மை பணியாளர்கள் கண்டுகொள்ளாமல், அலட்சியம் காட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் கவனிப்பார்களா?

-பொதுமக்கள், ராயபுரம்.

வெளிச்சத்தை மறைக்கும் செடி-கொடிகள்

சென்னை அமைந்தகரை 105 வார்டு மெட்டல் பேக்றி சாலையில் உள்ள மின்கம்பத்தை செடி, கொடிகள் சூழ்ந்துள்ளன. மின்விளக்கிலும் செடி-கொடிகள் படர்ந்து வெளிச்சத்தை மறைத்துள்ளது.

-வேல்முருகன், அமைந்தகரை.



சேறும், சகதியுமான சாலை

ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால், இந்த சாலை சிதலமடைந்து சேறும்-சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

- சேக்காடு மேட்டுத்தெரு குடியிருப்போர் நல சங்கம்.

போதை ஆசாமிகள் அநாகரீகம்

சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இந்த இடத்தை சமூக விரோதிகள் மதுகூடம் போன்று பயன்படுத்தி வருகின்றனர். மதுபோதையில் அங்கேயே சிறுநீர் கழிப்பது, மதுபாட்டில்களை உடைப்பது என்று அநாகரீமான செயல்களில் ஈடுகின்றனர். இதனால் பெண்கள் கீழே வரவே தயங்கும் நிலை இருக்கிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல்களும் திருடப்பட்டு வருகின்றன. போலீசார்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நொச்சி நகர் பொது நலச்சங்கம்.

பள்ளம் மூடப்படுமா?

சென்னை முகப்பேர் மேற்கு வெள்ளாளர் தெரு அர்வின் கார்டன் குடியிருப்பை ஒட்டியுள்ள மின்மாற்றியைப் புதிதாக மாற்றுவதற்காக மின்சார வாரியத்தால் பள்ளம் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக கிடக்கிறது. பள்ளத்தில் மழைநீர் தேங்கி கொசுக்கள் பெருகுகின்றன. அதன் எதிரே வேன் ஒன்றும் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அர்வின் கார்டன் குடியிருப்போர்கள் சங்கம்.

மேம்பால படிக்கட்டில் அசுத்தம்

சென்னை திருவொற்றியூர் ரெயில் நிலையம் செல்லும் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் படிகட்டுகளில் கால் வைக்கவே முடியாத அளவுக்கு மனித கழிவுகளும், காலி மதுப்பாட்டில்களும் கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக இருக்கிறது. எனவே இந்த அசுத்தம் அகற்றப்படுமா?

- பொதுமக்கள், திருவொற்றியூர்.

குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

சென்னை கொண்டித்தோப்பு சுந்தரம் முதலி தெருவில் உள்ள மின்சார டிராஸ்பார்மர் அமைந்துள்ள இடத்தை குப்பை கொட்டும் இடம் போன்று பயன்படுத்தி வருகிறன்றனர். இதால் அப்பகுதி அச்சுத்தமாக காட்சி அளிக்கிறது. எனவே அந்த இடத்தில் குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

- மணிசாகர், சமூக ஆர்வலர்.

நடைபாதை ஆக்கிரமிப்பு

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் காலேஜ் அருகே தேவலாயத்தை ஓட்டி உள்ள நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையில் மக்கள் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாதசாரிகள், வியாசர்பாடி.

பன்றிகள் தொல்லை

சென்னை குரோம்பேட்டை ஜாயிண்ட்நகர் பகுதிகளில் சாக்கடை கால்வாயை துர்வாரி அந்த மண்ணை தெருவில் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் பன்றிகள் தொல்லையும் அதிகம் இருக்கிறது.

-என்.நாகராஜன், குரோம்பேட்டை.



ஏரி தூர்வாரப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட பெரும்பாக்கம் ஏரிக்கரையோரம் உள்ள சித்தாலபாக்கம் ஜெயாநகரில் மழைக்காலம் தோறும் ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த ஆண்டாவது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியை தூர்வாருவதுடன், படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், சித்தாலபாக்கம்.

சாலை வசதி கிடைக்குமா?

திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி ஊராட்சிக்குட்பட்ட அன்னை இந்திராநகர் விரிவாக்க பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் அவ்வப்போது பெய்யும் மழைநீரே குளம் போல தேங்கிவிடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- ஜெகதீஷ்குமார், அன்னை இந்திரா நகர்.

சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் முதல்நிலை ஊராட்சி கருமாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படாமலேயே இருக்கிறது. இதனால் சாலை பெயர்ந்து விபத்து உருவாகும் சூழலும் நிலவுகிறது. எனவே பராமரிப்பின்றி கிடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைப்பதுடன், சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- பொதுமக்கள், நெடுங்குன்றம்.

வீணாகும் குடிநீர்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிறுத்தம் எதிரே நகராட்சியின் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதால் குடிநீர் சாலையில் வீணாகி கொண்டிருக்கிறது.

- பயணிகள்.

நிறுத்தப்பட்ட பணி எப்போது தொடங்கும்?

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் பஸ் நிலையம் அருகே சாக்கடை கால்வாய் இணைக்கும் பணியை கடந்த 6 மாதமாக மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் திடீரென்று அப்பணியை நிறைவு செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். பஸ் நிலையம் பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே இப்பணியை விரைந்து முடித்து பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஆர். பாண்டியன், கோவிலம்பாக்கம்.



Next Story