ஓட்டை விழுந்ததால் விசைப்படகு கடலில் மூழ்கியது


ஓட்டை விழுந்ததால் விசைப்படகு கடலில் மூழ்கியது
x
தினத்தந்தி 2 Nov 2021 10:24 AM IST (Updated: 2 Nov 2021 10:24 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டை வழியாக கடல் நீர் உள்ளே புகுந்ததால், விசைப்படகு மெல்ல மெல்ல கடலில் மூழ்கத் தொடங்கியது. 9 மீனவர்களும் மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் சென்னைக்கு திரும்பி வந்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26-ந் தேதி ராயபுரம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த முனியப்பன், ஜெயராமன் மணி, குமார், தியாகு, தனசேகர், வடிவேல், நாகராஜ் உள்பட 9 மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 31-ந் தேதி ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்களது விசைப்படகில் திடீரென ஓட்டை விழுந்தது. ஓட்டை வழியாக கடல் நீர் உள்ளே புகுந்ததால், விசைப்படகு மெல்ல மெல்ல கடலில் மூழ்கத் தொடங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விசைப்படகில் இருந்த மீனவர்கள், தங்களை காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டனர். ‘வயர்லெஸ்’ மூலம் கடலோர காவல் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆந்திர மாநில மீனவர்கள், தங்கள் படகில் 9 மீனவர்களையும் ஏற்றி பத்திரமாக கரைக்கு கொண்டு சென்றனர்.

ரூ.40 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு கடலில் மூழ்கியதுடன், படகில் ராயபுரம் மீனவர்கள் வைத்திருந்த வலை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்களும் கடலுக்குள் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக தப்பிய 9 மீனவர்களும் மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் சென்னைக்கு திரும்பி வந்தனர்.


Next Story