ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் தொழிலாளியை கொன்ற அண்ணன் கைது


ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் தொழிலாளியை கொன்ற அண்ணன் கைது
x
தினத்தந்தி 2 Nov 2021 4:50 PM IST (Updated: 2 Nov 2021 4:50 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் தொழிலாளியை கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன், போலீசில் சரண் அடைந்தார்.
கூலி தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி. இவருடைய மகன்கள் முனியசாமி (வயது 53), முருகன் (45). முனியசாமிக்கு திருமணம் ஆகவில்லை. முருகன் கூலி தொழிலாளி. 
இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் முருகன், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டு மாமனார் ஊரில் தங்கியிருந்து வந்தார்.
புதிய மோட்டார் சைக்கிள்
இந்த நிலையில் முருகன் தனது தந்தையின் உதவியுடன் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதனை தந்தையிடம் காண்பிக்க நேற்று சொந்த ஊருக்கு சென்றார். அங்கு தந்தை புலிப்பாண்டியிடம் மோட்டார் சைக்கிளை காண்பித்துவிட்டு ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இரவில் தந்தையின் வீட்டிலே முருகன் தங்கினார். இவர் ஒரு அறையிலும், அதற்கு அடுத்த அறையில் முனியசாமியும் தூங்கினர்.
அரிவாளால் வெட்டிக்கொலை
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்த முனியசாமி, முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் முனியசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 
இதுகுறித்து பசுவந்தனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சித்ரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் சரண்
இதற்கிடையே, முனியசாமி பசுவந்தனை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story