தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பருவமழை
கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்லும். அதே போன்று இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதைத் தொடரந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதே போன்று மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த மழை நேற்று குறைந்தது. நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை மெல்ல மெல்ல குறைந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டம் இன்றி காணப்பட்டது. லேசான வெயிலும் தலைகாட்டியது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால் மழை எதுவும் பெய்யவில்லை.
தீவிரம்
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. டூவிபுரம் சங்கரநாராயண பிள்ளை பூங்கா உள்ளிட்ட இடங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே மோட்டார்கள் அமைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக 8 வீடுகள் பகுதியாகவும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்தன.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூர் 23 மில்லி மீட்டர், காயல்பட்டினம் 32, குலசேகரன்பட்டினம் 9, விளாத்திகுளம் 41, காடல்குடி 23, வைப்பார் 37, சூரங்குடி 33, கோவில்பட்டி 30, கழுகுமலை 7, கயத்தார் 30, கடம்பூர் 31, ஓட்டப்பிடாரம் 19, மணியாச்சி 40, வேடநத்தம் 30, கீழஅரசடி 3, எட்டயபுரம் 51.8, சாத்தான்குளம் 6.8, ஸ்ரீவைகுண்டம் 12, தூத்துக்குடி 2.4 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
Related Tags :
Next Story