மழையால் பீட்ரூட் மகசூல் பாதிப்பு


மழையால் பீட்ரூட்  மகசூல் பாதிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 6:40 PM IST (Updated: 2 Nov 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் மழை காரணமாக பீட்ரூட் மகசூல் பாதிக்கப்பட்டு விலையும் சரிந்து உள்ளது.

குடிமங்கலம், 
குடிமங்கலம் பகுதியில் மழை காரணமாக பீட்ரூட் மகசூல் பாதிக்கப்பட்டு விலையும் சரிந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பீட்ரூட் சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதுதவிர கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, வெண்டை, கத்தரி, பீட்ரூட், மிளகாய், போன்ற காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பீட்ரூட் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற இடங்களில் குறைவான அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் கரிசல்மண் நிறைந்த பகுதியில் நல்ல விளைச்சலை கொடுக்கும் என்பதால் குடிமங்கலம் பகுதியில் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொாடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்குத் தயாராகி இருந்த பீட்ரூட் அழுகி காணப்படுகிறது.மேலும் பீட்ரூட் செடியில் தண்ணீர் தேங்கியதன் காரணமாக தரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 1 கிலோ பீட்ரூட் அதிகபட்சமாக ரூ.6-க்கு மட்டுமே விற்பனை ஆகிறது. பீட்ரூட் மகசூல் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் விலையும் சரிந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விலை சரிவு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு உழவு, களையெடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் என ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பீட்ரூட் அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் மழை காரணமாக பீட்ரூட் செடியின் இலைகளில் தண்ணீர் தேங்கி மேல் பகுதி அழுக தொடங்கியுள்ளது. 
ஈரப்பதம் காரணமாக கீழ்ப்பகுதியில் கிழங்குகள் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு சீரான விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
 இவ்வாறு அவர்கள் கூறினார்.

-

Next Story