இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் 1,518 கிராமங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள்
இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் 1,518 கிராமங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் 1,518 கிராமங்களில் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
நீலகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு தினமும் 1½ மணி நேரம் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை மூலம் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் ஆர்வம் உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளான தன்னார்வர்களுக்கான பணி, ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், மக்கள் இயக்கம் ஆக்குவது, பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு, ஊர் கூடி தேர் இழுப்போம், ஒன்றிய அளவிலான பயிற்சி திட்டமிடுதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கற்றல் இழப்பு
தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றிகரமாக இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் 1,518 கிராமங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 2 பேரை கொண்டு அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம் ஆகிய 2 இடங்களில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்படும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் வகுப்புக்கு அனுப்பி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கற்றல் இழப்பை குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின், மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜய்குமார், அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story