மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.
மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
ஊட்டி
மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்ற ஊட்டி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நிலத்தை அபகரிக்க முயற்சி
நீலகிரி மாவட்டம் ஊட்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பஷீர் அகமது. இவர் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஒட்டி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் புதிய கட்டிடம் கட்டி உள்ளார். இதற்காக அருகே இருந்த நிலத்தையும் ஆக்கிரமிக்க முயன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரான மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றார். இதுகுறித்து மூதாட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதற்கிடையே கடந்த 22-ந் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஷீர் அகமது ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தன்மீது மூதாட்டி புகார் அளித்தது தெரிய வந்தது.
இதனால் அவர் ஆத்திரம் அடைந்து பூரண குணமடைந்த பின்னர் மூதாட்டியை மீண்டும் நிலத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார். மேலும் மூதாட்டிக்கு ஆதரவாக பேசியவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் வாக்குவாதம் செய்து உள்ளார். யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயன்றது குறித்து மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.
பணியிடை நீக்கம்
அதன் பேரில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் மூதாட்டியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஷீர் அகமதை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story