தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரியில் 600 போலீசார் பாதுகாப்பு


தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரியில் 600 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 8:27 PM IST (Updated: 2 Nov 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரியில் 600 போலீசார் பாதுகாப்பு

ஊட்டி

தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரியில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பொதுமக்கள் கடைவீதிகளில் புத்தாடைகள் வாங்க வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவ்வப்போது நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கூறும்போது, தீபாவளி பண்டிகையை ஒட்டி நீலகிரி முழுவதும் ஆயுதப்படை, ஊர்க்காவல் படை என 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

மக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட வேண்டும் என்றார்.

சிறப்பு பஸ்கள்

நீலகிரியில் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது உறவினர்களுடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, நீலகிரி போக்குவரத்து கழகம் மண்டலத்தில் 6 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர், கோவை, திருச்சி, சேலம், துறையூர், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 தீபாவளி அன்று மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கம் இருக்காது. அதன் பின்னர் வருகிற 10-ந் தேதி வரை நீலகிரியில் இருந்து சிறப்பு பஸ்கள் பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளது என்றார்.

Next Story