பள்ளி வாகனங்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல்லில், பள்ளி வாகனங்களின் தரம் குறித்து கலெக்டர் விசாகன் நேற்று ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
பள்ளிகள் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் பள்ளிகளுக்கு வரத்தொடங்கி உள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.
718 வாகனங்கள்
இதையடுத்து மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக வாகனங்களும் பயன்படுத்தப்படும். எனவே அந்த வாகனங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதா?, 1½ ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்ததால் அதன் தரத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் நேற்று ஆய்வுக்காக அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
மாவட்டம் முழுவதும் 718 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நேற்று ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செயல்முறை விளக்கம்
அப்போது, பள்ளி வாகனங்களின் படிக்கட்டுகள், இருக்கைகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை உறுதித்தன்மையுடன் உள்ளதா? வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? முதலுதவி பெட்டி, அவசரகால வெளியேறும் வழி உள்ளதா? என்று கலெக்டர் சோதனை செய்தார்.
அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் சார்பில் விபத்தில் சிக்குபவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது தொடர்பான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தீயணைப்பு துறை சார்பில் பள்ளிகளிலோ, வீடுகளிலோ தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது, தீ விபத்தில் சிக்குபவர்களை எப்படி காப்பாற்றுவது என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தினேசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி, மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story