தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு-திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என புகார்


தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு-திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என புகார்
x
தினத்தந்தி 2 Nov 2021 9:53 PM IST (Updated: 2 Nov 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்கு திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்கு திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜ் வரவேற்று பேசினார். எம்.எல்.ஏக்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ஏ.கோவிந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-
மாவட்ட ஊராட்சிக்கு இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு? இதில் எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை மாவட்ட கவுன்சிலர்களுக்கு முறையாக தெளிவுபடுத்த வேண்டும். எங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், திட்டங்களை செயல்படுத்தவும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. மாவட்ட ஊராட்சிக்கு தேவையான நிதியை மாவட்ட நிர்வாகத்துடன் உரிய முறையில் கேட்டு பெற வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டங்களில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். ஏரிகளில் விவசாயிகள் மண்ணை அள்ளிக்கொள்ள தமிழக அரசு அரசாணை வழங்கியும், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் இதுவரை மண் அள்ளிக்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. எனவே விவசாயிகள் நலன் கருதி ஏரிகளில் மண் அள்ளிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.
வெளிநடப்பு
இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திட்டங்களை முறையாக செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறும் போது, ‘மாவட்ட ஊராட்சிக்கு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போதுமான நிதி ஆதாரம் இல்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்ட கவுன்சிலர் கோரிக்கைகளை நிறைவேற்ற போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றார்.

Next Story