தீ விபத்தில் 8 பேர் பலியான வழக்கு: சங்கராபுரம் பட்டாசு கடை உரிமையாளர் கைது


தீ விபத்தில் 8 பேர் பலியான வழக்கு: சங்கராபுரம் பட்டாசு கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2021 10:13 PM IST (Updated: 2 Nov 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

கைது

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பு கள்ளக்குறிச்சி சாலையில் மளிகை மற்றும் பட்டாசு கடை நடத்தி வருபவர் செல்வகணபதி(வயது 49). இவர் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 26-ந்தேதி செல்வகணபதிக்கு சொந்தமான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. 
இந்த கோர விபத்தில் சிறுவன் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் கொடுத்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து செல்வகணபதி நேற்று வீடு திரும்பியதாக சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியை கைது செய்தனர். 

Next Story