பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு
கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
கச்சிராயப்பாளையம்,
கோமுகி அணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின்போது கல்படை, பொட்டியம் உள்ளிட்ட ஆறுகள் வழியாக தண்ணீர் வரும். அவ்வாறு வரும் தண்ணீரை அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தேக்கி வைத்து, சம்பா சாகுபடி பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பழைய மற்றும் புதிய வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இந்த நிலையில் கல்வராயன்மலை பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 44 அடியை எட்டியது. அணை நிரம்பியதை அறிந்த கோமுகி அணை பாசன விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்அடிப்படையில் நேற்று காலை கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், கோட்டாட்சியர் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால் வழியாக தண்ணீரை திறந்து வைத்தார்.
தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாசனத்துக்காக அணையில் இருந்து புதிய, பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வருகிற 17-ந்தேதி வரை 15 நாட்களுக்கு தொடர்ந்து திறந்து விடப்படும். அதன்பிறகு அடுத்த 45 நாட்களுக்கு புதிய பாசன மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் வழியாக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story