நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் சிக்கியது
திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் சிக்கியது.
திண்டிவனம்,
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் ரெயிலில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடும். இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ரெயில் பயணத்தின்போது பட்டாசு கொண்டு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு திண்டிவனம் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் யாரேனும் பட்டாசுகளை கொண்டு செல்கின்றனரா? என்று திண்டிவனத்தில் செங்கல்பட்டு் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேசி, அணில்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி திண்டிவனம் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த பை மற்றும் சூட்கேசையும் சோதனை செய்தனர்.
1 கிலோ தங்கம்
அப்போது சென்னை செல்வதற்காக டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்த ஒரு பயணியின் பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தன.
இதையடுத்து அந்த பயணியிடம் நடத்திய விசாரணையில், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தீபக் தயாலால் சோனி(வயது 43) என்பதும், நகை வியாபாரியான இவர் 51 வகையான தங்க நெக்லசை திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வதும், அதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.
அபராதம்
இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் வணிகத்துறை அலுவலர் பாரி நேரில் வந்து நகையை பார்வையிட்டு, அவற்றை கணக்கீட்டார். இதன் மதிப்பு ரூ.47 லட்சத்து 43 ஆயிரத்து 251 ஆகும். இதையடுத்து இந்த நகைக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 596 விதிக்கப்பட்டது. இந்த தொகையை செலுத்திவிட்டு, தீபக் தயாலால்சோனி 1 கிலோ நகையை எடுத்துச்சென்றார்.
Related Tags :
Next Story