தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் மீது தனி அக்கறை


தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் மீது தனி அக்கறை
x
தினத்தந்தி 2 Nov 2021 10:35 PM IST (Updated: 2 Nov 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் மீது தனி அக்கறை கொண்டு முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் இன மக்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண்ஹால்தார் தலைமை தாங்கி விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும், அவர்கள் தொடர்புடைய வழக்குகள் மீது முறையாக விசாரணை, நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படுகிறதா என்றும், அவர்களது குழந்தைகள் கல்வியில் முன்னேறும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடுகள் முறையாக நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா எனவும், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

முனைப்புடன் பணியாற்ற

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்கள் மீது தனி அக்கறை கொண்டு முனைப்புடன் பணியாற்ற வேண்டும், அவர்களின் குறைகள் மற்றும் அநீதிகளை இந்த ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அவற்றுக்கு தீர்வு காண ஆணையம் முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த ஆணையம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கு இருமுறை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களிடம் முகாம்கள் நடத்தி இவ்வாணையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டி.மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரகுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story