மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம்-மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் அறிவிப்பு
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
நாமக்கல்:
வாடகையை உயர்த்த முடியவில்லை
தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.26 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.53.28 ஆகவும் இருந்தது. அப்போதே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்தியது. மேலும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து கடந்த 12.6.2014 அன்று பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது.
ஆனால் அதன்பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. கடந்த 6 ஆண்டுகளில் ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ.50-ம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.35-ம் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.31-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.103.25-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் விலை உயர்ந்து வருவதால் வாகனங்களின் வாடகையை உயர்த்த முடியவில்லை.
கடும் நெருக்கடி
இதனால் லாரி, பஸ், டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பல மோட்டார் வாகன உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தொழிலை விட்டே வெளியேறும் நிலை உருவாகி உள்ளது.
சர்வதேச விலைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்துள்ள மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.45-க்கும் விற்பனை செய்ய முடியும்.
ரூ.5 குறைக்க வேண்டும்
லாரி உரிமையாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இப்பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்து தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, டீசல் விலையை கண்டுகொள்ளவில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும்.
போராட்டம்
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், விரைவில் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story