காரைக்குடி கடைவீதியில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்


காரைக்குடி கடைவீதியில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2021 10:56 PM IST (Updated: 2 Nov 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரைக்குடியில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணித்தனர்.

காரைக்குடி, 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரைக்குடியில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணித்தனர்.

அலைமோதிய கூட்டம்

ஆண்டுதோறும் வரும் பண்டிகையில் தீபாவளி முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வீடுகளில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்தும், வீட்டில் பலகாரம் செய்து உறவினர்களுக்கு வழங்கி கொண்டாடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தாண்டு தீபாவளி நாளை(வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 
இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்கள் முதல் அனைவருக்கும் புத்தாடை வாங்குவதற்காகவும், பலகார பொருட்கள் வாங்குவதற்காவும் கடந்த ஒருவார காலமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடை வீதிகளுக்கு வந்து வாங்கிச் சென்றனர். இந்நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதல் இரவு வரை அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இவ்வாறு பெய்து வரும் மழையால் தீபாவளி பண்டிகைக்காக சாலையோரத்தில் கடை வைத்து விற்பனை செய்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் கடை வீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு

இந்நிலையில் நேற்றைய தினம் காரைக்குடி கடைவீதிகளில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்பட்டது. இதனால் செக்காலை ரோட்டில் 2 இடங்களில் போலீசார் தற்காலிகமாக உயர்கோபுரம் அமைத்து அதில் நின்றவாறு கூட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் ஒலி பெருக்கி மற்றும் தொலை நோக்கி உள்ளிட்ட கருவிகள் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணித்து அவ்வப்போது கூட்ட நெரிசல் குறித்த அறிவிப்பையும், திருடர்கள் நடமாட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதோடு பெண்கள் தங்களது நகைகளை பாதுகாப்பாக அணிந்து கொள்ளும்படியான அறிவுரைகளை ஒலி பெருக்கி மூலம் அறிவித்தபடியே இருந்தனர். கடந்த 3 நாட்களாக இந்த வழியாக தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிக்கு சென்ற வாகனங்களை போலீசார் மாற்று வழியில் திருப்பி அனுப்பினர்.

Next Story