திருவண்ணாமலையில் பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு


திருவண்ணாமலையில் பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2021 11:40 PM IST (Updated: 2 Nov 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடைவீதிகளில் திரண்ட பொதுமக்கள்

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை திருவண்ணாமலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

 இதையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுடன் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடைவீதிகளில் திரண்டனர். கடை வீதிகளில் காணும் இடமெல்லாம் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய பகுதிகளான சின்னக் கடைவீதி, கடலைக் கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் ஊர்ந்தபடி மெதுவாக சென்றனர். பெரும்பாலான பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யாததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். 

இதுபோல் இன்றும் (புதன்கிழமை) கடைவீதிகளில் அதிகமாக மக்கள் கூட வாய்ப்பு உள்ளதால் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து பாதிப்பை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story