புதுக்கோட்டையில் தொடர் மழை: வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது தந்தை-மகன் படுகாயம்


புதுக்கோட்டையில் தொடர் மழை: வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது தந்தை-மகன் படுகாயம்
x
தினத்தந்தி 3 Nov 2021 12:02 AM IST (Updated: 3 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் தந்தை, மகன் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை:
தொடர் மழை
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவர், புதுக்கோட்டை ரெயில் நிலைய ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ளார். பாண்டியனின் மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஆனந்தகுமார் (40), அசோக்குமார் (37) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஆனந்தகுமாருக்கு திருமணமாகி ஷீபா என்ற மனைவியும், கைலாஷ் பாண்டியன் (7), சிவலிங்கம் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கூலித்தொழிலாளியான அசோக்குமாருக்கு திருமணமாகவில்லை. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீடு பழமையான வீடாகும். இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக பாண்டியனின் வீட்டில் மேல்பகுதியில் மழைநீரால் பொதும்பி இருந்தது. 
மேற்கூரை இடிந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று பகல் 1 மணிக்கு மேல் வீட்டின் ஹாலில் பாண்டியன் மற்றும் அவரது மகன் அசோக்குமார் ஆகியோர் இருந்தனர். பாண்டியனின் மனைவி லட்சுமி வீட்டில் சமையல் அறை பகுதியில் கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தார். ஆனந்தகுமாரும், அவரது மனைவி ஷீபா, குழந்தைகள் ஆகியோர் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்றிருந்தனர். இந்த நிலையில் வீட்டின் ஹாலில் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாண்டியன், அசோக்குமார் ஆகிய இருவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். லட்சுமி பதறியபடி வீட்டில் இருந்து வெளியே வந்து சத்தம் எழுப்பினார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த பாண்டியன், அசோக்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ வேனில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா, நிலைய அதிகாரி ராஜ ராஜ சோழன், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
பாண்டியன் வசிக்கும் வீடு 80 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது எனக்கூறப்படுகிறது. அவர்கள் வாடகைக்கு தான் அங்கு வசித்து வருகிறார்கள். இதற்கிடையில் கடைவீதிக்கு சென்ற ஆனந்தகுமார் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.
தண்ணீர்தொட்டி
வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது. வீட்டின் மேல் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டி அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது.

Next Story