லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
தளவாபாளையம் அருகே லாரி டிரைவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நொய்யல்,
லாரி டிரைவர்
தளவாபாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருபவர் நாகேஷ் (வயது 40). இவரது மனைவி நாகலட்சுமி (35). இந்தநிலையில், நாகேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அவரது சித்தி மகன் மனோஜ், நாகேஷை தனது மோட்டார் சைக்கிளில் தளவாபாளையம் கோழிப்பண்ணை அருகே அழைத்து சென்றார்.
அப்போது அங்கிருந்த மனோஜின் சகோதரியின் கணவர் கார்த்திக், நாகேஷை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி என் மனைவிகிட்ட ஏன் சண்டைக்கு போகிறாய் என்று கையில் வைத்திருந்த அரக்குமட்டையால் நாகேஷின் முதுகில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
கொலை மிரட்டல்
இதேபோல் மனோஜ் அங்கு கிடந்த கட்டையை எடுத்து நாகேஷின் தலையில் தாக்கியுள்ளார். இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்தவுடன் அங்கு நின்று கொண்டிருந்த அசோக், மற்றொரு கார்த்திக் ஆகியோர் நாகேஷை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் நாகேஷ் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதை பார்த்த 4 பேரும் நாகேசுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் நாகேஷை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஷை தாக்கிய கார்த்திக், மனோஜ், மற்றொரு கார்த்திக், அசோக் ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story