முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி


முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
x
தினத்தந்தி 3 Nov 2021 12:48 AM IST (Updated: 3 Nov 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

கல்லறை திருநாளையொட்டி, முன்னோர்களுக்கு உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி, நவ.3-
கல்லறை திருநாளையொட்டி, முன்னோர்களுக்கு உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கல்லறை திருநாள்
கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் "கல்லறை திருநாள்" கடைபிடிக்கப்படுகிறது.
கல்லறை திருநாளில் கல்லறைகளை கழுவி பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபபுத்தகத்தை படித்து, பாடல்களை பாடி பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வதும், கண்ணீர் அஞ்சலி செலுத்துவதும் கிறிஸ்தவர்களின் வழக்கம்.
முன்னோர்களுக்கு அஞ்சலி
அதன்படி, திருச்சியில் நேற்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் கல்லறை, கண்டோன்மெண்ட் கல்லறை, உறையூர் கல்லறை, பொன்மலைப்பட்டி எஸ்.வி.டி. கல்லறை தோட்டம், திருச்சி சங்கரன் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறை  போன்ற கல்லறை தோட்டங்களில் நேற்று காலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கல்லறைகளை பார்ப்பதற்கு கிறிஸ்தவர்கள் நேற்று மாலை வரை வந்த வண்ணம் இருந்தனர். அதையொட்டி விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஏழைகளுக்கு உதவி
மேலும் கல்லறை தினத்தையொட்டி கல்லறை தோட்டம் வந்திருந்த ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் உதவிகளும் செய்தனர். கல்லறைதோட்டத்தையொட்டி உள்ள கிறிஸ்தவ ஆலங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் தொட்டியம், மணப்பாறை, முசிறி, தா.பேட்டை, மணப்பாறை, துறையூர், உப்பிலியபுரம், திருவெறும்பூர், கல்லக்குடி, லால்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லறை திருநாள் நடைபெற்றது.

Next Story