தென்தமிழகத்தை கலக்கிய பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் தஞ்சையில் கைது


தென்தமிழகத்தை கலக்கிய பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் தஞ்சையில் கைது
x
தினத்தந்தி 3 Nov 2021 1:29 AM IST (Updated: 3 Nov 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

தென்தமிழகத்தை கலக்கிய பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் தஞ்சையில் கைது செய்யப்பட்டார். அவர் தப்பிச்செல்ல முயன்றபோது தவறி விழுந்ததில் கால் முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்:
தென்தமிழகத்தை கலக்கிய பிரபல ரவுடி கூட்டாளிகளுடன் தஞ்சையில் கைது செய்யப்பட்டார். அவர் தப்பிச்செல்ல முயன்றபோது தவறி விழுந்ததில் கால் முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல ரவுடி
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் ரஸ்தா வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மகன் லட்சுமணகாந்தா என்ற கருப்பா(வயது 25). இவர் மீது தென்தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன.
தலைமறைவாக இருந்த இவரை 3 மாவட்ட போலீசாரும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் லட்சுமணகாந்தா கோவையில் பதுங்கி இருந்து அடிக்கடி தஞ்சைக்கு வந்து செல்வதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடவடிக்கை எடுக்குமாறு தனிப்படை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
3 பேர் சிக்கினர்
அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டு உமாசங்கர் மற்றும் போலீஸ்காரர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் லட்சுமணகாந்தா தஞ்சையில் இருந்து கோவைக்கு பஸ்ஏறுவதற்காக பஸ் நிலையம் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு இருந்த லட்சுமணகாந்தாவையும், அவருடன் வந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த ராமையன் மகன் மோகன்(21), தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் குயவர் தெருவை சேர்ந்த இளங்கோ மகன் முத்தமிழ்ச்செல்வன்(29) ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்தனர்.
கால் முறிந்தது
அப்போது லட்சுமணகாந்தா போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதில் தவறி விழுந்ததில் அவருக்கு கால் முறிந்தது. இதையடுத்து லட்சுமண காந்தாவை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பட்டாக்கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கபிஸ்தலத்தை சேர்ந்த ஒருவர், இடப்பிரச்சினை காரணமாக பாப்பாநாடு அருகே உள்ள ஒருவரை கொலை செய்வதற்காக லட்சுணமகாந்தாவை அணுகி உள்ளார். அதற்காக லட்சுமணகாந்தா கோவையில் இருந்து தஞ்சைக்கு வந்து பேராவூரணியில் தங்கி இருந்து நோட்டமிட்டு வந்துள்ளார். அவரை கொலை செய்வதற்காக தேதியும் குறித்து இடத்தையும் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமணகாந்தா, கொலை செய்வதற்கு முன்பாக கோவைக்கு சென்று விட்டு வருவதாக தெரிவித்து பஸ் ஏறுவதற்காக வந்தபோது போலீசாரிடம் சிக்கினார். லட்சுமண காந்தாவை அழைத்து வந்தவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
பிடிபட்ட 3 பேரையும், பட்டாகத்தியையும் தனிப்படை போலீசார் பாப்பாநாடு போலீசில் ஒப்படைத்தனர். 
இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story