வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
பேச்சிப்பாறை அருகே வாழை தோட்டத்தில் புகுந்த யானைகள் செவ்வாழை மரங்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவட்டார்,
பேச்சிப்பாறை அருகே வாழை தோட்டத்தில் புகுந்த யானைகள் செவ்வாழை மரங்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
யானைகள் உலா
பேச்சிப்பாறையை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து யானைகள் அவ்வப்போது இரவு நேரத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. குறிப்பாக கோதையாறு, மைலார் போன்ற பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் பகல் நேரங்களில் யானைகள் அவ்வப்போது உலா வருகிறது.
கடந்த வாரம் யானைகள் நீண்ட தூரம் பயணித்து பேச்சிப்பாறை தனியார் தோட்டங்கள் மற்றும் கோதையாற்றை கடந்து வெட்டிமுறிச்சான், தொழிகடவு பகுதியில் உள்ள விளைநிலங்கள், தென்னங்கன்றுகளை நாசம் செய்தது.
சபரிமலை சீசன்
பொதுவாக சபரிமலை சீசன் காலங்களில் கேரளா வனப்பகுதியிலிருந்து யானைகள் தமிழக வனப்பகுதிகளுக்கு இடம்பெயரும். அவை குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் தங்கள் பகுதிகளுக்கு சென்றுவிடும். வறட்சி அதிகமான காலங்களில் தண்ணீர் குடிப்பதற்கும், உணவுக்கும் நீர்நிலை சார்ந்த பகுதிகளை நாடிவருவது வழக்கம். தற்போது இந்தநிலைமாறி அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுற்றி யானைகள் வருகின்றது.
அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் புதிதாக நடவுசெய்யப்பட்ட ரப்பர் செடிகளுக்கிடையே ஊடுபயிராக அன்னாசி பயிரிடப்படுகிறது. அன்னாசி பழ சுவை, மணம் போன்றவை இவைகளுக்கு பிடித்து போனதால் யானை கூட்டம் அதிக அளவு இந்த பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகிறது.
வாழைமரங்கள் சேதம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோதையார் இடது கரை சானல் பாயும் இடத்துக்கு அருேக மணியன்குழி பகுதியில் செவ்வாழைத்தோட்டத்தில் யானைகள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாழைமரங்களை நாசப்படுத்தின. இதனால் பெரிய அளவில் தோட்டத்தில் வாழைமரம்நட்டிருந்த விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி இது என்பதால், காலையில்தான் அந்தபகுதி்க்கு சென்ற மக்கள் யானைகளால் நாசம் செய்யப்பட்ட தோட்டத்தைப்பார்த்து அதிர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், காட்டிலிருந்து மக்கள் வசிக்கும் குடியிருப்பையொட்டியுள்ள பகுதிக்கு யானைகள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story