சேலத்தில் தொழிலாளி கொலை: ‘மனைவியை தரக்குறைவாக பேசியதால் கொன்றேன்’ கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்


பிரபாகரன்
x
பிரபாகரன்
தினத்தந்தி 3 Nov 2021 2:36 AM IST (Updated: 3 Nov 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி கொலையில் நண்பரை போலீசார் கைது செய்தனர். மனைவியை தரக்குறைவாக பேசியதால் கொன்றேன் என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அன்னதானப்பட்டி,
வெள்ளிப்பட்டறை தொழிலாளி
சேலம் நெத்திமேடு எம்.ஜி.ஆர். நகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (வயது 47). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அலமேலுமங்கை. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பிரபுவும், அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபாகரனும் (52) நண்பர்கள் ஆவர். பிரபாகரன் நெத்திமேடு, அன்னதானப்பட்டி பகுதிகளில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபுவும், பிரபாகரனும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள பாழடைந்து கிடந்த ஒரு வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
நண்பர் கைது
அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் பிரபுவை, பிரபாகரன் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பிரபுவை கொலை செய்த அவருடைய நண்பரான பிரபாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தரக்குறைவாக பேசினார்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரனுக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக செல்வி கணவரை பிரிந்து தர்மபுரியில் உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே நண்பர்களான பிரபுவும், பிரபாகரனும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது வீட்டில் நண்பர் பிரபுவுடன் அமர்ந்து மது அருந்தினார். அப்போது பிரபாகரன் மனைவியை பிரபு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கழுத்தை அறுத்து கொலை
பின்னர் சமாதானம் அடைந்த அவர்கள் இருவரும் மீண்டும் மது அருந்த முடிவு செய்தனர். மனைவியை திட்டியதால் பிரபு மீது பிரபாகரன் கோபத்திலேயே இருந்துள்ளார். இதையடுத்து இருவரும் மீண்டும் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில் மது அருந்தினர்.
அப்போது பிரபுவுக்கு அதிகளவு போதை ஏறியது. மனைவியை தரக்குறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் இருந்த பிரபாகரன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ஏற்கனவே தான் கொண்டு வந்த அரிவாளால் பிரபுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
மேலும் அந்த வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டுள்ளார். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story