கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியில் வெற்றி


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியில் வெற்றி
x
தினத்தந்தி 3 Nov 2021 2:41 AM IST (Updated: 3 Nov 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை இடைத்தேர்தலில் சிந்தகி தொகுதியில் ஆளும் பா.ஜனதாவும், ஹனகல் தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் இரு தொகுதிகளிலும் ஜனதா தளம் (எஸ்) டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்துள்ளது.

பெங்களூரு: சட்டசபை இடைத்தேர்தலில் சிந்தகி தொகுதியில் ஆளும் பா.ஜனதாவும், ஹனகல் தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் இரு தொகுதிகளிலும் ஜனதா தளம் (எஸ்) டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்துள்ளது.

இடைத்தேர்தல்

கர்நாடக சட்டசபையில் உறுப்பினர்களாக இருந்த எம்.சி.மணகுலி (சிந்தகி), சி.எம்.உதாசி (ஹனகல்) ஆகியோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தனர். இதையடுத்து சட்டசபையில் சிந்தகி, ஹனகல் தொகுதிகள் காலியாக இருந்தன. அந்த 2 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் சிந்தகியில் பா.ஜனதா சார்பில் ரமேஷ் புசனுர், காங்கிரஸ் சார்பில் அசோக் மணகுலி, ஜனதா தளம் (எஸ்) சார்பில் நாஜியா அங்கடி ஆகியோரும், ஹனகல் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சிவராஜ் சஜ்ஜனர், காங்கிரஸ் சார்பில் சீனிவாஸ் மானே, ஜனதா தளம் (எஸ்) சார்பில் நியாஜ் ஷேக் ஆகியோரும் போட்டியிட்டனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாயின. அந்த வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும், சிந்தகி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ரமேஷ் புசனுர் முன்னிலை பெற்றார். அதே போல் ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ் மானே முன்னிலை பெற்றார். இரு தொகுதிகளிலும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதி வரை தொடர்ந்து அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை பெற்றபடி வந்தனர். இறுதியில் சிந்தகியில் பா.ஜனதா வேட்பாளர் ரமேஷ் புசனுரும், ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ் மானேவும் வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது

சிந்தகியில் பா.ஜனதா வேட்பாளர் ரமேஷ் புசனுர் 93 ஆயிரத்து 865 வாக்குகள் பெற்று 31 ஆயிரத்து 185 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் அசோக் மணகுலி 62 ஆயிரத்து 680 வாக்குகளும், ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் நாஜியா அங்கடி 4,353 வாக்குகளும் பெற்றனர். அதே போல் ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாஸ் மானே 87 ஆயிரத்து 490 வாக்குகள் பெற்று 7 ஆயிரத்து 373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

அவருக்கு அடுத்தபடியாக பா.ஜனதா வேட்பாளர் சிவராஜ் சஜ்ஜனர் 80 ஆயிரத்து 117 வாக்குகளும், ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் நியாஸ் ஷேக் 927 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளது. ஜனதா தளம் (எஸ்) வசம் இருந்த சிந்தகியை பா.ஜனதாவும், பா.ஜனதா வசம் இருந்த ஹனகல் தொகுதியை காங்கிரசும் கைப்பற்றியுள்ளது.

ஜனதாதளம் (எஸ்) டெபாசிட் இழப்பு

சிந்தகியை தன்வசம் வைத்திருந்த ஜனதா தளம் (எஸ்) வெறும் 927 வாக்குகளை மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிந்தகியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 3-வது இடம் பிடித்த காங்கிரஸ் தற்போது 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த 2 தொகுதிகளிலும் ஜனதா தளம் (எஸ்) டெபாசிட்டை இழந்துள்ளது.

 மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்), மிக மோசமான படுதோல்வியை சந்தித்து இருப்பது, அக்கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இடைத்தேர்தலில் ஒரு தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி இருப்பதால், இந்த தேர்தல் முடிவு ஆளும் பா.ஜனதாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக கருதப்படுகிறது. 

அதற்கு முன்பு பெலகாவி மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை நெருங்கியது. வெறும் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் பா.ஜனதா வெற்றி பெற்றது. அதே போல் பசவ கல்யாண், மஸ்கி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மஸ்கியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் பா.ஜனதா தோல்வி
இந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சிறிது அதிர்ச்சியை தந்துள்ளது. அவரது சொந்த மாவட்டத்தில் அதுவும் அவரது சொந்த தொகுதியான சிக்காம் தொகுதிக்கு ஒட்டியபடி அமைந்துள்ள ஹனகலில் ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. 

இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா 50 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. அதாவது 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜனதா வெற்றி வாகை சூடியுள்ளது. பொதுவாக இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சியே வெற்றி பெறும். ஆனால் இந்த இடைத்தேர்தலில் ஒரு தொகுதியை அதுவும் பா.ஜனதா வசம் இருந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story