குன்றத்தூர் அருகே கழிவறையில் பிணமாக கிடந்தவர்கள் அசாம் மாநில காதல் ஜோடி
குன்றத்தூர் அருகே கழிவறையில் பிணமாக கிடந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டது.
பூந்தமல்லி,
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம், சிட்கோவில் உள்ள கம்பெனியின் 3-வது மாடியில் இருந்த கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
கட்டிட மேலாளர் அந்த கழிவறையின் கதவை திறந்து பார்த்தபோது, 22 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மேலாளர், குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு இறந்து போனவர்கள் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரித்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இறந்து போன நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரத்தினம் போரா (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் தனது குடும்பத்தினருடன் திருமுடிவாக்கம் பகுதியில் வாடகைக்கு தங்கி அங்குள்ள கம்பெனியில் வேலை செய்து வந்தார் என்பதும் இறந்து கிடந்த பெண் அவரது உறவினரான நிருபமா போரா என்பதும் தெரியவந்தது. மகள், சித்தப்பா உறவு முறை கொண்ட அவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அவர்களுடைய உறவினர்கள் மற்றும் பெற்றோர் கண்டித்து வந்த நிலையில், கம்பெனி காவலாளிகளின் துணையோடு இந்த கட்டிடத்தில் ஜோடி தஞ்சம் அடைந்திருக்கலாம் என்றும், அங்கு இருந்தவர்கள் ரத்தினம் போராவை கொலை செய்து விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிருபமா போராவை காணவில்லை என்று அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை செய்த பிறகே முழுமையான தகவல் தெரியவரும் எனவும், வேலையை விட்டு நின்ற காவலாளிகளிடமும் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ள னர்.
Related Tags :
Next Story