திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில தான் முதல் முறையாக முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கென அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் இயற்கை முறையில் நஞ்சற்ற மிளகாய் சாகுபடி உற்பத்தி செய்ய சிறப்பு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 2,216 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் மிளகாய் பயிர் 706 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக விவசாயிகள் ஆண்டு முழுவதும் பச்சை மிளகாய் உற்பத்திக்காகவும், அக்டோபர், ஜனவரி மாதங்களில் காய்ந்த மிளகாய் உற்பத்திக்காகவும், அனன்யா மிளகாய் மற்றும் குண்டு மிளகாய், நாட்டு ரகம் விதைகளை பயன்படுத்தி கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ரகங்களை பயிரிடும் போது அதன் முளைப்புத்திறன் குறைவாக இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு 1.5-ல் இருந்து 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இதனை விவசாயிகள் நேரடியாக காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யும்போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.
மேலும் பச்சை மிளகாயை பொறுத்தவரை சந்தை விலை நிரந்தரமாக இல்லாததால் பச்சை மிளகாய் சாகுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு நிரந்தரமான வருமானம் கிடைப்பதில்லை. விவசாயிகள் இயற்கை இடுபொருட்கள், வளர்ச்சி ஊக்கிகளான பஞ்சகாவியா, மூலிகை பூச்சி விரட்டிகள், சொட்டு நீர் பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிளகாய் சாகுபடியில் நஞ்சில்லாத தரமான விதைகளை உற்பத்தி செய்து உயர் விளைச்சல் பெறவும் விவசாயிகளுக்கு சரியான சந்தை வாய்ப்புகளை சந்தை தன்னார்வலர் ஜெகன் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சிவப்பு புரட்சியாக மிளகாய் சாகுபடி செய்து விளைபொருளுக்கு அதிக வருமானம் பெற வழிவகை செய்து தரவும் அரசாணைப்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிபூண்டி, கடம்பத்தூர், திருவள்ளூர் மற்றும் சோழவரம் போன்ற வட்டாரங்களில் 150 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலை துறையின் மூலம் இயங்கி வரும் அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு தேவையான மிளகாய் ரகம் நாற்றுக்கள் 30 லட்சம் எண்ணிக்கையில் குறியீட்டு முறை உற்பத்தி செய்து ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் ரூ.20 ஆயிரம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
விவசாயிகள் சாகுபடி செய்த பிறகு தொழில் நுட்பங்கள் குறித்த சந்தேகங்களை தோட்ட கலைத்துறையை அணுகி தெளிவு படுத்திக்கொள்ளலாம். காய்ந்த மிளகாய் சந்தை படுவதற்கான வாய்ப்புகள் நல்ல சந்தை தன்னார்வலர் ஜெகன் மூலம் உருவாக்கி் தரப்படும்.
எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி முதல்-அமைச்சர்அறிவுரையின்படி இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி செய்தும், நஞ்சில்லா விளைபொருள் உற்பத்தி செய்து இரு மடங்கு வருமானத்தை பெருக்கியும் விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த விழுப்புணர்வு ஏற்படுத்தி மிளகாய் நாற்றுகளை இலவசமாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபகுமாரி அனி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, நல்ல சந்தை தன்னார்வலர் ஜெகன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story