‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சென்னை
கோவில் அருகே அசுத்தம்
சென்னை வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவில் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக இருக்கிறது. மேலும் அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடம் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும்போது மனம் சங்கடப்படுகிறது. எனவே கோவில் அருகே சுகாதார சீர்க்கேடுடன் காட்சி அளிக்கும் இப்பகுதியை தூய்மை செய்து தர வேண்டும். குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
-பக்தர்கள். ஆஸ்பத்திரியை சூழ்ந்த மழைநீர்
தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனையில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தெப்பம் போல் தேங்கி உள்ளது. மழைக்காலம் வந்தாலே இந்த அவலநிலை தொடர்கிறது. இதனால் நோயாளிகளும், பார்வையாளர்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இப்பிரச்சினைக்கு விடிவு காலம் கிடைப்பது எப்போது?
நா.ஆசைதம்பி, குரோம்பேட்டை.
மழைநீர் வடிகால்வாய் மூடி சேதம் சென்னை செனாய்நகர் டி.பி. சத்திரம் 24-வது குறுக்கு தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி உடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இது நடந்து செல்பவர்கள் கால்களை பதம் பார்க்கின்றன. எனவே சேதம் அடைந்த மூடியை மாற்றி தர வேண்டுகிறோம்.
- பொதுமக்கள், டி.பி.சத்திரம்.
மழைநீருடன் கலந்த கழிவுநீர்
சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் கால்வாயில் முறைகேடாக கழிவுநீர் இணைப்பை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருவில் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. இப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.
- பொதுமக்கள், கொளத்தூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.ஆர்.புரம், விரிவாக்கம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை குழாய் பதிக்கிறோம் என்ற பெயரில் காங்கீரிட் சாலையை நாசம் செய்துவிட்டார்கள். தற்போது மக்கள் நடந்து செல்வதற்கு கூட முடியாத அளவுக்கு சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. மீண்டும் காங்கீரிட் சாலை அமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. தற்போது இந்த சாலையை சீரமைத்து தந்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
-ஆர்.ராமநாதன், விமானப்படை முன்னாள் வீரர்.
சாலை படுமோசம்
சென்னை மடிப்பாக்கம் சிவ விஷ்ணு கோவில் அருகே டாக்டர் அம்பேத்கர் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் நீச்சல் குளம் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே வாகனங்களை ஓட்டி செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த சாலை சீரமைத்து தரப்படுமா?
-சு.வெங்கட்ராமன், மடிப்பாக்கம்.
இருளில் மூழ்கும் பஸ் நிலையம் சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் இருக்கிறது. இதனால் மாலை வேளை ஆனதும் பஸ் நிலையம் இருளில் மூழ்கி விடுகிறது. பயணிகள் அடையும் சிரமமும் தொடர்கதையாகி வருகிறது.
- பொதுமக்கள், முல்லைநகர்.
அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த மழைநீர்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பழையனுர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளால், மழைநீர் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் மழலை குழந்தைகளும், அங்கன்வாடி பணியாளர்களும் அவதிப்படுகின்றனர்.எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சு.மோ.ராஜேஷ்குமார், வக்கீல்.
வெளிச்சம் தராத உயர் கோபுர மின் விளக்கு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மாதர்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கு சில மாதங்களாக செயல்படாமல் இருக்கிறது. இதனால் இரவு வேளையில் பஸ் நிலையத்தில் இருளில் மூழ்கி பயணிகள் சிரமப்படுகிறார்கள். - கிராம மக்கள். மாதர்பாக்கம்.
மழைநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பாரதியார் தெருவில் பல ஆண்டுகளாக மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்து குளம் போல் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் விஷப்பூச்சிகள் படையெடுத்து வருகின்றன. மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மழைநீர் கால்வாயில் ஆங்காங்கே மண் கொட்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயை சீரமைத்து தருவார்களா? - பொதுமக்கள், பொத்தேரி.
குடிநீருக்காக பரிதவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், சரவம்பாக்கம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் தெருவில் பழைய குடிநீர் மேல்நிலை தொட்டி இடிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் புதிய தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் டாக்டர் அம்பேத்கர் தெரு மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், குடிநீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது. தண்ணீருக்கான தினமும் பிரச்சினை ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
- கே.ஜெகன் குப்புசாமி, சரவம்பாக்கம் கிராமம்.
மின் பெட்டி அபாயம்
காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் மணிகண்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள மேட்டு கம்மாள தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தில் பொறுத்தப்பட்டுள்ள மின்பெட்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலம் என்பதால் மின்விபத்து நேரிடும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மின்பெட்டியை மாற்றி அமைத்து தர வேண்டும்.
- பொதுமக்கள், சின்ன காஞ்சீபுரம்.
Related Tags :
Next Story