2 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து 2 லட்சம் பேர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.
திருப்பூர், நவ.4-
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து 2 லட்சம் பேர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். பஸ் நிலையங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது.
சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகை இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பனியன் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா முடிந்தது. பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு நேற்று முதல் விடுமுறை விடப்பட்டது.
போனஸ் வாங்கிய தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் பஸ், ரெயில் மூலமாக சொந்த ஊர் நோக்கி சென்றனர். வருகிறார்கள். அரசு பஸ்கள் மூலமாக வெளிமாவட்டத்துக்கு சென்றனர். தொழிலாளர்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் 320 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 80 ஆயிரம் பேர் திருப்பூரில் இருந்து வெளிமாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 லட்சம் பேர் பயணம்
இந்தநிலையில் நேற்று காலை முதல் பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. திருப்பூர் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணிகளின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து நேற்று 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பஸ்களில் ஏறும் வகையில் போலீசார் ஏற்பாடு செய்தனர். கட்டைகளால் தடுப்புகள் அமைத்து வரிசையில் நின்று பஸ்களில் ஏற பயணிகளை அனுமதித்தனர்.
நேற்று மாலை 5 மணி வரை 80 ஆயிரம் பேர் வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றனர். நேரம் செல்ல செல்ல பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணிகளின் வருகையை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. 2 லட்சம் பேர் திருப்பூரில் இருந்து சொந்த ஊர் நோக்கி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
-
Related Tags :
Next Story