சாலைகளில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூரில் தொடர் மழை காரணமாக சாலைகளில் மண்சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோத்தகிரியில் வீடு இடிந்தது.
ஊட்டி
மஞ்சூரில் தொடர் மழை காரணமாக சாலைகளில் மண்சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோத்தகிரியில் வீடு இடிந்தது.
மழையால் மண்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, சாரல் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையால் பொக்லைன் எந்திரம் மூலம் மண்சரிவு அகற்றப்பட்டது.
அந்தரத்தில் தொங்கும் வீடு
மஞ்சூர் அருகே தொட்டகம்பை-பிக்கட்டி சாலையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சாலையின் நடுவே மண் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மண்சரிவு, செடி, கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டது.
பின்னர் போக்குவரத்து சீரானது. பாரதி நகர் பகுதியில் தொடர் மழை காரணமாக சந்திரகலா என்பவரது வீட்டின் முன்பு இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வீடு அந்தரத்தில் தொங்குவது போல் காட்சி அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சேறும், சகதியுமாக...
இதேபோல் மேலும் சில சாலைகளில் லேசான மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. விவசாய விளை நிலங்களில் இருந்தும் மண் சாலையில் விழுவதால் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று அதிகாலை கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனியை சேர்ந்த சின்னபொண்ணு என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அரசு நிவாரண தொகையான ரூ.4,100-ஐ பாதிக்கப்பட்ட சின்னபொண்ணுவிடம் வழங்கினர். மேலும் பந்தலூர் தாலுகாவில் மழை காரணமாக சேரம்பாடியில் இருந்து எருமாடு வழியாக சுல்தான்பத்தேரில் சாலையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-11, குந்தா-39, அவலாஞ்சி-29, எமரால்டு-18, கெத்தை-26, கிண்ணக்கொரை-56, அப்பர்பவானி-24 குன்னூர்-33, பர்லியார்-24, எடப்பள்ளி-22, கோத்தகிரி-23, கீழ் கோத்தகிரி-31, கோடநாடு-30, பந்தலூர்-14 என மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story