பஸ் நிலையத்தில் குவிந்த மக்கள்


பஸ் நிலையத்தில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 3 Nov 2021 7:02 PM IST (Updated: 3 Nov 2021 7:02 PM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு செல்ல ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் குவிந்தனர்.

ஊட்டி

சொந்த ஊருக்கு செல்ல ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் குவிந்தனர். 

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பட்டாசுகள் வாங்கவும், புத்தாடைகள் எடுக்கவும் பொதுமக்கள் அதிகம் பேர் வந்தனர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தங்களது சொந்த வாகனங்களில் வந்ததால் ஊட்டி கமர்சியல் சாலை, லோயர் பஜார், எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 சிலர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டுச்சென்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அவ்வாறு நிறுத்தி சென்ற வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டு அபராதம் விதித்தனர். 

கூட்டம் அலைமோதியது

தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் தங்கி படித்து வரும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். மேலும் வெளிமாநில, வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நீலகிரியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். 

அவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தேவையான பொருட்கள், பட்டாசுகள் போன்றவற்றை வாங்கிவிட்டு சென்றனர். 

சிறப்பு பஸ்கள்

ஊட்டியில் இருந்து கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், கூடலூர் சென்ற பஸ்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதேபோல் கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். சிலருக்கு இருக்கை கிடைக்காததால் நின்றபடி பயணம் செய்ததை காண முடிந்தது.

மேலும் கோவை, திருப்பூர், சேலம், மதுரை போன்ற வெளியிடங்களுக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளியையொட்டி பயணிகள் செல்ல வசதியாக 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ் நிலையத்தில் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. இதையொட்டி அவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. 


Next Story