பொருட்கள் வாங்க கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே சிறுவர், சிறுமிகளுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால் மனதுக்கு பிடித்த புத்தாடைகளை அணிந்துகொண்டு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடிக்கலாம் என்பதால் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மேலும் இனிப்பு மற்றும் கார வகைகளை வீடுகளில் செய்வார்கள். அதற்கு தேவையான பொருட்களை சில நாட்களுக்கு முன்பே பொதுமக்கள் வாங்கி விடுவார்கள்.
இதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்கு புதிதாக வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதையும் பொதுமக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால், திண்டுக்கல் நகரின் கடைவீதிகளில் பொருட்களை வாங்குவதற்காக நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சாலைகள் அடைப்பு
இதன் காரணமாக மாநகராட்சி சாலை, ரதவீதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி சாலை, வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை என கடைவீதிகள் உள்ள சாலைகளில் போலீசார் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி அடைத்தனர்.
மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களையும் மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டனர். ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் ஆகியவற்றில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் அந்த கடைகளில் தேனீக்கள் கூட்டம் போல் மக்கள் மொய்த்ததை காண முடிந்தது.
மேலும் குறைந்த விலையில் ஆடைகளை வாங்க விரும்புபவர்களுக்காக கடைவீதிகளில் சாலையோர கடைகளும் ஏராளமாக போடப்பட்டிருந்தன. இந்த கடைகளில் வியாபாரிகள் ரெடிமேட் ஆடைகளை கூவி, கூவி விற்றனர். அவற்றை வாங்குவதற்கும் ஏராளமானோர் குவிந்தனர்.
பேரம் பேசி வாங்கினர்
அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை கடைக்காரர்களிடம் பேரம்பேசி வாங்கிச்சென்றனர். இதேபோல் தீபாவளி பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் திண்டுக்கல்லில் நேற்று தீபாவளி பொருட்கள் விற்பனை களைகட்டியது.
---------
(பாக்ஸ்) மழை பெய்யாததால் வியாபாரிகள் மகிழ்ச்சி
தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல்லில், சாலையோர வியாபாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதியே கடைகளை அமைத்து ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையை தொடங்கினர்.
ஆனால் அவர்கள் கடைகளை அமைத்ததில் இருந்து திண்டுக்கல்லில் சாரல், பலத்த மழை பெய்து வந்தது. காலையில் தொடங்கும் மழை பகல் முழுவதும் நீடித்ததால் கடந்த சில நாட்களாகவே சாலையோர வியாபாரிகள் கலக்கத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்யவில்லை. இதனால் காலையில் இருந்தே சாலையோர கடைகளில் வியாபாரம் படுஜோராக நடந்தது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
---------
Related Tags :
Next Story