தொடர் மழை: நரியனோடை, காணிமேடு தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நரியனோடை, காணிமேடு தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விடிய, விடிய மழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை அடை மழையாக விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காலையில் இருந்து இரவு வரை தொடர் மழை பெய்தது.மரக்காணம் பகுதியில் பெய்த பலத்த மழையினால் காணிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வடகோட்டிப்பாக்கம், வண்டிப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தளவானூர், எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாறு, பம்பை ஆறுகளிலும் மற்றும் விக்கிரவாண்டி அருகே ஓடும் சங்கராபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பம்பை ஆற்று வெள்ளப்பெருக்கினால் குயிலாப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி சில ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கெடாரில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை, சங்கராபுரம், திருக்கோவிலூர், தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணை, ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கல்வராயன்மலையில் உள்ள மேகம், பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் தொடர் மழை காரணமாக உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி, அருகில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்தது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தநாடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்லக் கூடிய பிரதான சாலையில் உள்ள நரியனோடை தரைப்பாலமும் நேற்று மழைநீரில் மூழ்கியது. இதனால் காலை முதல் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதை வழியாக வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் சேந்தமங்கலம், சேந்தநாடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
அத்தியூர் கிராமத்தில் புகுந்த ஏரி நீர்
இதனிடையே தொடர் மழையால் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, சரிவர தூர்வாரப்படாததால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது ஊருக்குள் புகுந்தது. இதனால் அக்கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் தெருக்களில் தேங்கிய தண்ணீரை அகற்றவும், ஏரி வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சங்கராபுரம் அடுத்த திம்மனந்தல் ஏரியும் நிரம்பி, உபரிநீர் செல்ல வழி இல்லாததால் அருகே உள்ள கரும்பு, நெல் வயல் மற்றும் பழைய காலனி தெருக்களில் புகுந்தது. இதனால் 100 ஏக்கரில் கரும்பு, நெல் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மற்றும் காலனி பகுதி மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story