இன்று தீபாவளி பண்டிகை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த நேரங்களில் பட்டாசு வெடிக்கவேண்டும்
பொதுமக்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள். அப்போது நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி பண்டிகையான இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை, திறந்தவெளியில் ஒன்றுகூடி அரசு நிர்ணயித்த நேரங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதையும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் கவனமாகவும், விபத்தில்லாமலும் வெடித்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story