மரம் விழுந்து பலியான பெண் போலீஸ் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்


மரம் விழுந்து பலியான  பெண் போலீஸ் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்
x
தினத்தந்தி 3 Nov 2021 8:34 PM IST (Updated: 3 Nov 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பலியான பெண் போலீஸ் உடல் ஆற்காடு அருகே சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஆற்காடு

சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பலியான பெண் போலீஸ் உடல் ஆற்காடு அருகே சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பெண் போலீஸ் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (வயது 42). சென்னை முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் சாய்பாபா, ெரயில்வே ஊழியர். இவர்களுக்கு அருண்குமார் (23), விஷால் (16) என்ற மகன்களும்,  சினேகா பிரியா (19) என்ற மகளும் உள்ளனர். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் கவிதாவுக்கு சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டது. எனவே அவர் தனது இருசக்கர வாகனத்தில் தலைமை செயலகத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. எனவே கவிதா முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்றார். அப்போது பலத்த காற்று வீசியதில் தனிப் பிரிவு அலுவலகம் அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்து கவிதாவின் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

21 குண்டுகள் முழங்க அடக்கம்

போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவிதாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை வாகனம் மூலம் எடுத்து வரப்பட்டது.

நேற்று காலை கவிதாவின் உடல் காவனூர் கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம். எல்.ஏ., தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து பெண் போலீஸ் கவிதாவின் உடல் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story