தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Nov 2021 9:17 PM IST (Updated: 3 Nov 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத மின்விளக்குகள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து தோமையார்புரம் சுனாமி காலனி நடுத்தெருவில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வர அச்சப்படுகிறார்கள். எனவே, அனைத்து தெருவிளக்குகளையும் எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குண்டும், குழியுமான சாலை 

நெல்லை கங்கைகொண்டானில் இருந்து வெங்கடாசலபுரம் வரை சுமார் 4 கிலோ மீட்டருக்கு சாலை கடந்த 8 ஆண்டுகளாக குண்டும், குழியுமான காணப்படுகிறது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறாா்கள். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுமக்களின் நலன் கருதி இந்த சாைலயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அரிகரன், வெங்கடாசலபுரம்.

பள்ளிக்கூடத்தின் மேற்கூரை மாற்றப்படுமா?

அம்பை தாலுகா வெள்ளாங்குழி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளிக்கூடத்தின் மேற்கூரை ஓடுகளால் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பள்ளிக்கூடத்தை சுற்றி சுற்றுச்சுவரும் இல்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளியின் மேற்கூரை ஓடுகளை அகற்றிவிட்டு, காங்கிரீட் கூரையாக மாற்றிதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மாதவன், வெள்ளாங்குழி. 

வெளிச்சம் தராத உயர்கோபுர மின்விளக்கு 

திசையன்விளை நகர பஞ்சாயத்து காமராஜர் சிலைக்கு அருகில் அற்புத விநாயகர் கோவில் முன்பு உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. ஆனால், இந்த மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. வெளிச்சம் தராத உயர்கோபுர மின்விளக்கை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆல்பர்ட், திசையன்விளை.

அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படுமா?

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு செங்கோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள், கேரள எல்லையோர பகுதிகளில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகள், வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால், இந்த ஆஸ்பத்திரி முதலுதவி சிகிச்சை மையமாக தான் திகழ்கிறது. அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தென்காசி, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். 
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

ஆபத்தான தரைமட்ட கிணறு 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கஸ்பா கிராமம் 6-வது வார்டு முத்தாரம்மன் கோவில் தெருவில் தரைமட்ட கிணறு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. சில சமயங்களில் கால்நடைகள் அதில் விழுந்து காயம் ஏற்படுகிறது. உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன் இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
முத்துராமலிங்கம், வல்லநாடு.

மின்விளக்கு எரியுமா?

நாசரேத் நகர பஞ்சாயத்து ஜெயபாண்டியன் தெருவில் அழகம்மாள் ஓடைக்கு மேல்புறம் கடந்த 3 வாரங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இந்த இடத்தில் முட்செடிகள் நிறைந்து இருப்பதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகளை எரிய வைக்க வேண்டுகிறேன்.
ஜெபகரன், நாசரேத்.

சாலையை சீரமைக்க வேண்டும்

ஆறுமுகநேரி ராஜமணியபுரம் அம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை கடந்த சில மாதங்களாக சேதம் அடைந்து உள்ளது. இந்த சாலையால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மைக்கேல், ராஜமணியபுரம்.



Next Story