தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
தூத்துக்குடி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி
நாடு முழுவதும் பொதுமக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். இந்த தீபாவளி பண்டிகையின் போது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையில் குளித்து புது துணிகள் அணிந்து இறைவனை வழிபடுவார்கள். அதன் பின்னர் பட்டாசுகளை வெடித்து சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று தீபாவளிக்கு முந்தையநாள் என்பதால் ஏராளமான மக்கள் காலை முதல் கடைவீதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். கடந்த சில நாட்களாக மிரட்டிய மழை நேற்று மக்களுக்கு வழிவிட்டது. இதனால் மக்கள் அதிக அளவில் ஜவுளிக் கடைகளுக்கு சென்று துணிகளை வாங்கி சென்றனர்.
பாதுகாப்பு
தூத்துக்குடியில் முக்கிய தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்தனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்து கொண்டே இருந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகரில் கடந்த 2 தினங்களாக மழை விட்டு, விட்டு பெய்ததால் மக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர். சாலை ஓரங்களில் ஜவுளி, விளையாட்டு பொருட்கள் விற்பனை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.
நேற்று மழை இல்லாமல் வெயில் அடித்ததால் மக்கள் குடும்பத்துடன் ஜவுளிகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் ஏற்பாட்டில் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி, நாககுமாரி, ராணி, பத்மாவதி ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story