தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x

தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுக்கோட்டை:
இன்று தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. புத்தம் புதிய ஆடை அணிந்து, இனிப்பு, பலகார வகைகளை படையலிட்டு வழிபாடு நடத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் நேற்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 
புதுக்கோட்டையில் நேற்று காலையில் மழை பெய்து கொண்டிருந்ததால் கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளிலும், பழைய பஸ் நிலையம் முதல் அண்ணாசிலை அருகே வரையிலும் சாலையோரம் போடப்பட்டிருந்த தரைக்கடைகளில் வியாபாரம் பாதிப்படைந்தது. மழையில் நனைந்தப்படியே நின்று வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். மழை பெய்த போது மக்கள் கூட்டம் குறைந்திருந்தது.
பாதுகாப்பு பணி
இந்த நிலையில் மழை நின்றபின் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பண்டிகையை கொண்டாட ஜவுளிகள், பட்டாசு, பலகாரம், இனிப்பு வகைகள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகள் வாங்க நேற்று இரவிலும் கூட்டம் அலைமோதியது. 
பொதுமக்களுக்கு தங்களுக்கு தேவையானதை வாங்கிச்சென்றனர். பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று கடைகளில் வியாபாரம் சற்று அதிகமாக நடைபெற்றது. கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பஸ் நிலையத்தில் கூட்டம்
இந்த நிலையில் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். இதனால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல கிராமப்புறங்களில் இருந்து புதுக்கோட்டை நகரப்பகுதியில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் டவுன் பஸ்களில் வந்து சென்றனர். இதனால் டவுன் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
பொன்னமராவதி
பொன்னமராவதி அண்ணாசாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவையான பொருட்கள், துணிமணிகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அண்ணா சாலை, காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகப்படியான கூட்டம் என்பதனால் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாகவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
தொடர் மழையால் விற்பனை மந்தம்
மணமேல்குடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஜவுளி, இனிப்பு, மளிகை மற்றும் பட்டாசு ஆகியவற்றை வாங்க மணமேல்குடி கடைவீதிக்கு வருவார்கள். இந்நிலையில் தொடர் கனமழை பெய்து வருவதால் மணமேல்குடி கடைவீதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தளவு காணப்பட்டது. மேலும், ஜவுளிக்கடைகள், பேன்சி ஸ்டோர், மளிகை கடைகள், பட்டாசுக்கடை ஆகியவற்றில் பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. இதனால் கடைகளில் தீபாவளி விற்பனை மந்தமாக காணப்பட்டது.

Next Story