ஆரணியில் இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியல்


ஆரணியில் இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Nov 2021 10:42 PM IST (Updated: 3 Nov 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தமிழக அரசு வீடு கட்டித்தர வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

ஆரணி

ஆரணியில் இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தமிழக அரசு வீடு கட்டித்தர வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

அடிப்படை வசதிகள் இல்லை 

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கமிட்டி வளாகத்தில் 125 குடும்பங்களை சேர்ந்த இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். 

அங்கு, அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒரே வளாகத்தில் அனைத்துக் குடும்பத்தினரும் கோணிப்பைகள், அட்டைகள், தகரம் ஆகியவற்றால் தடுப்புப்போல் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். 

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கி, அதில் தமிழக அரசு வீடு கட்டித்தர வேண்டும், என மாவட்ட கலெக்டரிடமும், தமிழக அகதிகள் முகாம் தலைமை அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நேற்று முன்தினம் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தர அடிக்கல் நாட்டினார்.

சாலை மறியல்

அதைத்தொடர்ந்து நேற்று ஆரணி-வந்தவாசி சாலையில் மில்லர்ஸ் கூட்ரோடு அருகே இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

மறியலில் ஈடுபட்டவர்கள், எங்களுக்கும் இடம் ஒதுக்கி, அதில் தமிழக அரசு வீடு கட்டித்தர வேண்டும், ஒரே வளாகத்தில் எங்களை அகதிகள் போலவே நடத்தி வருவதைத் தவிர்க்க வேண்டும், எனக் கோஷம் எழுப்பினர். 

காலை 9 மணி அளவில் தொடங்கிய சாலை மறியல் காலை 10½ மணிவரை நீடித்தது. இதனால் அங்குப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் க.பெருமாள், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அதிகாரிகள், அவர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மாவட்ட பொறுப்பாளர் பேச்சுவார்த்தை

அப்போது ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் பள்ளிக்கூட அறிவியல் ஆய்வக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துது. 

அதில் பங்கேற்பதற்காக தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் வந்தவாசியில் இருந்து ஆரணியை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். 

மில்லர்ஸ் கூட்ரோடு அருகே இலங்கை அகதிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், இவரின் காரும் போக முடியாமல் நின்றது. 

காரில் இருந்து கீழே இறங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன், அவர்களிடம் வந்து நான் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து, பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறேன், உங்களுக்கும் தமிழக அரசு வீடுகள் கட்டித்தரும், எனக்கூறியதும் இலங்கை அகதிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நேரில் பார்வையிட்டார்

இதையடுத்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமுக்கு நேரில் சென்று, அவர்கள் வசிக்கும் வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு ஆரணியை நோக்கி சென்றார்.

Next Story