கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை ரூ.1000-க்கு விற்பனை


கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை ரூ.1000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Nov 2021 10:43 PM IST (Updated: 3 Nov 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ, குண்டுமல்லி கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கடலூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. 

 அதாவது நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையான குண்டு மல்லி மற்றும் மல்லிகை பூ நேற்று தலா ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை பெண்கள் போட்டி போட்டு வாங்கியதால், மாலைக்குள் மல்லிகை பூ அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது.

மேலும் நேற்று முன்தினம் ரூ.600-க்கு விற்பனையான முல்லை பூ நேற்று ரூ.800-க்கும், ரூ.80-க்கு விற்ற சம்பங்கி ரூ.120-க்கும், ரூ.70-க்கு விற்பனையான கேந்தி ரூ.150-க்கும், ரூ.150-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ரோஜா ரூ.200-க்கும், கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விலை உயர்வையும், நேற்று பெய்த தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கிச்சென்றனர்.

வரத்து குறைவு

பண்டிகை காலம் என்பதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து குறைவாலும், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதாலும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு குறைந்தளவே பூக்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Next Story