விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை செங்கால் ஓடை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட தரைப்பாலம் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதில் செங்கால் ஓடை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.மேலும் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு ப குதி காரணமாக, கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. நேற்று மதியம் வரை மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக கடலூர் கூத்தப்பாக்கம், முத்தையாநகர், ஸ்டேட் பாங்க் காலனி, நத்தவெளி சாலை, பாதிரிக்குப்பம், கே.என்.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.
மேலும் கடலூர் நகரில் உள்ள சாலைகளில் குடிநீர் குழாய், புதைவட கேபிள் பதிக்கப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக கிடந்தன. இந்த பகுதிகள் தற்போது போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன.
வியாபாரிகள் பாதிப்பு
இதேபோல் வானமாதேவி, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், கொத்தவாச்சேரி, பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, கீழ்செருவாய், பெலாந்துறை, லக்கூர், வடக்குத்து, தொழுதூர், குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய விடிய இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக புவனகிரியில் 14 செ.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக எஸ்.ஆர்.சி.குடிதாங்கியில் 4.3 செ.மீட்டரும் பதிவாகி இருந்தது.
இந்த கனமழையால் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடைகள் அமைத்திருந்த சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கல்குணம் பகுதியில் உள்ள செங்கால் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் ஓடையின் குறுக்கே அமைந்துள்ள கல்குணம்- திருவெண்ணெய்நல்லூர் இணைப்பு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதுபற்றி அறிந்த கலெக்டர் பாலசுப்பிரமணியம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் குறிஞ்சிப்பாடியில் தாழவாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள், வாய்க்காலை கடந்து தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரம் சாய்ந்து விழுந்தது
வெண்கரும்பூர் அருகே விருத்தாசலம் - திட்டக்குடி மெயின் ரோட்டில் இருந்த வேப்பமரம் ஒன்று மெயின் ரோட்டில் சாய்ந்து விழுந்தது. தகவலறிந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் வெண்கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச் செல்வி இளவரசன், திட்டக்குடி தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக வந்து சாலையில் விழுந்த புளியமரத்தை அப்புறப்படுத்தினர்.
இதேபோல், பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் சாலையோரம் இருந்த புளிய மரம் அருகிலிருந்த ஆறுமுகம் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மீது சாய்ந்து விழுந்தது. இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் மற்றும் பெண்ணாடம் போலீசார் உதவியுடன் விழுந்த மரத்தை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்
மேலும் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நடவு செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விளை நிலங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க, வடிகால் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெலாந்துறை அணைக்கட்டு நிரம்பியது
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்ணாடம் அருகே உள்ள பெலாந்துறை அணைக்கட்டு தனது முழு கொள்ளளவான 6 அடியை எட்டியது. அணைக்கட்டு நிரம்பியதையடுத்து வினாடிக்கு 3310 கன அடி உபரிநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story