கடலூர், மாவட்டத்தில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு
கடலூர், மாவட்டத்தில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்,
தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தற்போது தீவிரமடைந்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 280 ஏரி, குளங்களில் 21 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 40-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதில் கடலூர் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு , திட்டக்குடி பகுதி வெள்ளாறு, காட்டுமன்னார்கோவில் கொள்ளிடம் ஆறு என்று மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கொள்ளிடம் ஆறு
காட்டுமன்னார்கோவில் அருகே கடலூர்-தஞ்சை மாவட்ட எல்லையில் கீழணை உள்ளது. கொள்ளிடத்தின் குறுக்கே உள்ள இந்த அணையின் நீர்மட்டம் 9 அடியாகும். தற்போது நீர்மட்டம் 8.5 அடியாக உள்ளது. இந்நிலையில் கீழணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. இந்த நீர் அப்படியே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால், பொதுமக்கள் அவ்வழியாக செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் பேரி கார்டு வைத்து பாதையை அடைத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்வதை தடுக்கும் வகையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கரையோர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆபத்தை உணராத இளைஞர்கள்
மேலும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொதுமக்கள் ஆற்றங்கரைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் அமைந்துள்ளதால், புதுச்சேரி மாநில இளைஞர்கள் சிலர் ஆற்றின் மறுகரையோரம் உள்ள தரைப்பாலத்தில் நின்றபடி ஆபத்தை உணராமல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதை வேடிக்கை பார்த்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story