5 பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம்: மாவட்ட செயலாளரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை
பா.ம.க. மாவட்ட செயலாளரை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதால் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை இட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 அரசு பஸ்களின் கண்ணாடி கல்வீசி தாக்கி நொறுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே வன்னியர்களுக்கான 10.5 சதவித இட ஒதுக்கீடு ரத்து என அறிவித்த கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே அவர்கள், இதுபோன்று கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று காலை விருத்தாசலத்தில் வசிக்கும் பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயனை, அவரது வீட்டிற்கே சென்று விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரணடு அங்கித் ஜெயின் தலைமை போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, சுமார் 3 மணி நேரம் விசாரித்தனர்.
இது குறித்து அறிந்த பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் பா.ம.க.வை சேர்ந்த வக்கீல்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இதையடுத்து பா.ம.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயனை போலீசார் விடுவித்தனர். மேலும் பஸ்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story