பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே அவ்வவ்போது பலத்த மழை பெய்தது. தற்போது வடகிழக்கு பருவ மழையும் பலத்த மழையாக பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினமும் மழை பெய்ததால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் அவ்வவ்போது பலத்த மழையும், விட்டு, விட்டும் மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்ததால் 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார்.
அந்தவகையில் இனி பள்ளிகள் தீபாவளி பண்டிகை விடுமுறையை தொடர்ந்து வருகிற 8-ந் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். இரவில் பெய்த பலத்த மழையினால் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் செல்வம் வேலாயுதத்தின் கூரை வீடு இடிந்தது. இதேபோல் கொட்டரை நீர்த்தேக்கத்தின் உபரி நீர் வெளியேறும் பகுதியில் கரையோரத்தில் இருந்த 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரியத்தினர் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி சாய்ந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி சரி செய்தனர். பலத்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பெரம்பலூர் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
விசுவக்குடி நீர்த்தேக்கம்
தற்போது பெய்த பலத்த மழையினால் வேப்பந்தட்டை தாலுகா விசுவகுடி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்த அதிகரித்துள்ளது. 33 அடி கொள்ளளவு கொண்ட விசுவக்குடி நீர்த்தேக்கம் தற்போது 24.59 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பியுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு விவசாய பாசனத்திற்காக வெங்கலம் பெரிய ஏரிக்கு செல்கிறது. விசுவக்குடி நீர்த்தேக்கம் முதல் வெங்கலம் பெரிய ஏரி வரை உள்ள கிராமங்களில் கல்லாற்றில் தண்ணீர் செல்வதால் பொது மக்கள் விவசாயிகள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விசுவகுடி நீர்த்தேக்கத்தை பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதேபோல, மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த் தேக்கத்தில் 212.47 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மருதையாற்றின் உபரிநீர் வெளியேறக்கூடிய கிராமங்களான கொட்டரை, ஆதனூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், தொண்டப்பாடி மற்றும் நொச்சிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள பொது மக்களும், விவசாயிகளும் மருதையாற்றை கடக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story