மாணவியின் வீட்டிற்கு சென்று புத்தாடை இனிப்பு வழங்கி மகிழ்வித்த தஞ்சை கலெக்டர்


மாணவியின் வீட்டிற்கு சென்று புத்தாடை இனிப்பு வழங்கி மகிழ்வித்த தஞ்சை கலெக்டர்
x
தினத்தந்தி 4 Nov 2021 12:32 AM IST (Updated: 4 Nov 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோரை இழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று புத்தாடை, இனிப்பு, பட்டாசு ஆகியவற்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி மகிழ்வித்தார். மேலும் அந்த மாணவிக்கு 3 ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

தஞ்சாவூர்:
பெற்றோரை இழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று புத்தாடை, இனிப்பு, பட்டாசு ஆகியவற்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி மகிழ்வித்தார். மேலும் அந்த மாணவிக்கு 3 ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.
பத்தாம் வகுப்பு மாணவி
தஞ்சை திவான் நகரை சேர்ந்தவர் சிவசாமி. இவர் நோயால் இறந்து விட்டார். இவருடைய மனைவியும் பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு தர்மசீலன்(வயது 25), தர்மபிரபு(20), பலாஜி, கார்த்தி ஆகிய 4 மகன்களும், மீராஜாஸ்மீன்(15), மதுமதி(6) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சகோதரர்கள் 4 பேரில் 3 பேர் பாத்திரக்கடையிலும், ஒருவர் லாட்ஜிலும் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். பெற்றோர்  இல்லாததால் 6 பேரும் தங்களுடைய பெரியம்மா மற்றும் சித்தி வீட்டில் வசித்து வந்தனர். இதில் மீராஜாஸ்மீன் தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
வீடு கேட்டு விண்ணப்பம்
மாணவி மீராஜாஸ்மின், தனது தங்கையுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து, தங்களுக்கு பெற்றோர் இல்லை. இருக்க வீடும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த மாணவி வீடு இல்லாமல் தனது சகோதர, சகோதரிகளுடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி மாணவியிடம் அதற்கான ஆணையையும் ஒப்படைத்தார்.
புத்தாடை வழங்கி மகிழ்வித்த கலெக்டர்
இந்த நிலையில் நேற்று திடீரென கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாணவி மீராஜாஸ்மின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர், தீபாவளி பண்டிகையை மாணவி மீராஜாஸ்மின் தனது சகோதர, சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவருக்கும், அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகிய 6 பேருக்கும் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசு ஆகியவற்றை வழங்கி மகிழ்வித்தார். மேலும் மாணவியின் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கினார்.
கல்வி உதவித்ெதாகைக்கான ஆணை
அவற்றை பெற்றுக்கொண்ட மீராஜாஸ்மின் மற்றும் அவருடைய சகோதர, சகோதரிகள் கண்ணீர் மல்க கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் மீராஜாஸ்மினுக்கு 1-12-2021 முதல் 3 ஆண்டுகளுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.
அந்த தொகையை படிப்பு செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறும், நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் மாணவி மீராஜாஸ்மினை கலெக்டர் வாழ்த்தினார். அதோடு மட்டுமல்லாது மேலும் மாணவியின் தங்கையான சிறுமி மதுமதிக்கும் உதவி செய்வதாக தெரிவித்தார்.
நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை...
இது குறித்து மாணவி மற்றும் அவருடைய சகோதரர்கள் கூறுகையில், எங்களுக்கு வீடு ஒதுக்கி கொடுத்ததோடு நின்றுவிடாமல் மற்றவர்களைபோல நாங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் புத்தாடை, இனிப்பு, பட்டாசு ஆகியவற்றை நேரில் வந்து வழங்கிய கலெக்டருக்கு நன்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எங்கள் வாழ்நாளில் அவரை என்றும் மறக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், தாசில்தார் மணிகண்டன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் எழிலரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story