சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: வீரகனூரில் அதிகபட்சமாக 63 மி.மீட்டர் பதிவு


சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: வீரகனூரில் அதிகபட்சமாக 63 மி.மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 4 Nov 2021 1:43 AM IST (Updated: 4 Nov 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. வீரகனூரில் அதிகபட்சமாக 63 மி.மீட்டர் மழை பதிவானது.

சேலம்
பரவலாக மழை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஆத்தூர், கரியகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
ஏற்காட்டில் நள்ளிரவு பெய்த மழையானது நேற்று காலை வரையிலும் நீடித்தது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிர் நிலவியது. சுற்றுலா பயணிகள் குறைவாகவே வந்திருந்தனர்.
சேலத்தில் சாரல்
இந்நிலையில், சேலம் மாநகரில் நேற்று அதிகாலை மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பொதுமக்களும் கடைகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். 
அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, சூரமங்கலம் ஆகிய உழவர் சந்தைகள் முன்பு சாலையோரம் கடைகள் வைத்திருந்த காய்கறி வியாபாரிகளின் விற்பனை பாதிக்கப்பட்டது. இருப்பினும், சாரல் மழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றதை காணமுடிந்தது. சேலத்தில் நேற்று காலை முதல் மாலை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஏத்தாப்பூர் ஏரி
பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டம்பாளையம், தும்பல், பணைமடல், கருமந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பகல் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏத்தாப்பூர் பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த அபினவம் ஏரி, தொடர் மழையால் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.இதில் சிறுவர், சிறுமியர் மற்றும் வாலிபர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மேலும் ஏரி அருகே உள்ள விவசாய கிணறு நிரம்பி, தண்ணீர் ஊற்றெடுத்து வயல்வெளிகளில் ஓடுகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
மழை அளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
வீரகனூர்-63, பெத்தநாயக்கன்பாளையம்-50, கெங்கவல்லி-40, தம்மம்பட்டி-40, ஏற்காடு-24.6, ஆத்தூர்-24.2, கரியகோவில்-20, ஆனைமடுவு-18, காடையாம்பட்டி-15, மேட்டூர்-11.4, சங்ககிரி, ஓமலூர்-10, சேலம்-5.6, எடப்பாடி-3.8.

Related Tags :
Next Story